இலங்கையின் அரசியல் தீர்வு குறித்து ரணிலுடன் பேசினேன்! எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சுவிட்சர்லாந்தில் அண்மையில் சந்தித்தபோது இலங்கையின் அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு OECD அமைப்பு எங்கனம் பங்களிக்க முடியும் எனவும் இதன்போது ஆராய்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து என்ன பேசினீர்கள் என மின்னஞ்சல் மூலமாக வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எனினும், பிரதமர் ரணிலுடனான சந்திப்புத் தொடர்பாக எவருக்கும் விரிவான பேட்டிகளைத் தருவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும் மின்னஞ்சல் பதிலில் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் உலகளாவிய பொருளாதார சூழலில் அரசுகள் பொருளாதார, சமூக மற்றும் நிர்வாக ரீதியான சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் உதவிவரும் OECD அமைப்பின் அபிவிருத்தி உதவிக்குழுவின் தலைவராக தற்போது எரிக் சொல்ஹெய்ம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Comment