வித்தியாவின் படுகொலைக்கு அனுதாபம் தெரிவித்த நோர்வே

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த கொடுமையான வன்முறைச் சம்பவத்தினை மனவருத்தத்துடன் நினைவு கூர்ந்து கொள்வதாக நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிறேட் லோசன் தெரிவித்தார்.

யாழ். பொதுநூலக வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச இசை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘வித்தியாவிற்கு நிகழ்ந்த இந்த சம்பவமானது நாடு முழுவதும் உலுக்கியதுடன், பெண்களுக்கு எதிரான பெரிய வன்முறையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

நோர்வே அரசாங்கம் இலங்கையின் வடபகுதி மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பதற்கான உரிமை என்ற கருப்பொருளை மையமாக வைத்து செயற்பட்டு வருகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளிலும், எமது நாட்டிலும் நடைபெற்று வருகின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை செய்யாதிருக்க சிறு பராயத்தில் இருந்து ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு கற்பித்து கொடுக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சமத்துவம் உரிமை என்பது பற்றி பாடசாலை ஆசிரியர்களாளும், சமூக ஆர்வலர்களாலும், கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த இசை நிகழ்வினை செய்வதற்கான முக்கிய நோக்கம், கலைஞர்களுக்கு இடையில் நட்பினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்துவதுடன், இனங்களுக்கு இடையில் நட்பினையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், இசை என்பது சர்வதேச ரீதியலான ஒரு மொழி கவலையாக இருக்கும் போது, இசையினைக் கேட்டால் மனதிற்கு ஆறுதலாகவும், உற்சாகமாகவும் இருக்கும். அந்த வகையில் தான் இசை அமைந்துள்ளது.

எனவே, இந்த இசை நிகழ்வின் ஊடாக மக்களுக்கு இடையில், நட்பும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமென்று கூறியதுடன், தமிழ் மொழியில் தனது நன்றிகளையும் நோர்வேயின் இலங்கை;கான தூதுவர் தெரிவித்துக் கொண்டார்.

Post Comment