இலங்கையின் விசாரணை அறிக்கை குறித்து ஆச்சரியமடையும் எரிக் சொல்ஹெய்ம்!

இலங்கையின் போர் குற்றம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை அறிக்கை ஒன்று முன்வைக்கப்படுவது குறித்து தான் ஆச்சரியமடைவதாக இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் சமாதான பிரதிநிதியாக செயற்பட்ட நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் வெளியிடப்படும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கூறியதாகவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

போர் குற்றங்கள் சம்பந்தமான உள்நாட்டு விசாரணை அறிக்கை இந்த மாதம் வெளியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் சர்வதேச ரீதியில் இலங்கையின் போர்க்குற்றம் சம்பந்தமான அறிக்கையை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Post Comment