நோர்வே எதிராக கொழும்பில் ஆர்பாட்டம்

நோர்வேயில் அரசின் குழந்தைகள் பராமரிப்பு துறையின் பொறுப்பில் உள்ள இலங்கை வம்சாவளி குழந்தைகளை அவர்களின் பெற்றோரின் பராமரிப்பிலேயே விடவேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு நோர்வே தூதரகத்துக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

நோர்வேயில் குழந்தைகள் பராமரிப்பு சம்பந்தமாக அரசின் சிறார் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் காணப்படுகின்றன.

இந்த விவகாரம் நோர்வேயின் நீதிமன்றங்கள் வரை சென்று பல குழந்தைகள் அரசின் சிறார் பராமரிப்பு துறையின் பொறுப்பிலேயே தொடர்ந்தும் இருக்கின்றன.

குழந்தைகளை பராமரிக்கும் விதம் தொடர்பில் எழுந்த கருத்து முரண்பாடுகளை அடுத்து நோர்வே அரசின் பொறுப்பில் எடுக்கப்பட்ட இரண்டு இந்தியக் குழந்தைகள் தொடர்பான பிரச்சனை இரு நாட்டுக்கும் இடையில் பெரும் கருத்துமுரண்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் குழந்தைகள் இந்தியாவிலுள்ள அவர்களின் உறவினர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை, நோர்வேயில் இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்கள் இப்படியான நிலைமையை எதிர்நோக்கியிருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் முறையிட்டுவருகின்றனர்.

குழந்தைகள் பெற்றோரின் பொறுப்பில் இல்லாமல் வேறு தரப்பினரின் பராமரிப்பில் இருக்கும்போது அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

குழந்தைகளை குடும்ப சூழ்நிலைகளிலிருந்து பிரித்துவைப்பதற்கு எதிராக குழந்தைகளின் பெற்றோர் நோர்வேயில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கையிலுள்ள உறவினர்கள் தெரிவித்தனர்.

நோர்வே தரப்பின் விளக்கம்

இதேவேளை, கொழும்பில் இன்று ஆர்பாட்டம் செய்தவர்களோடு பேசிய நோர்வே தூதரக அதிகாரிகள், நோர்வேயின் சிறார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சில தகவல்களை வெளியிட்டனர்.

ஒரு குழந்தை வளர ஏற்ற சூழல் வீட்டில் இல்லை என்றாலோ அல்லது குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக ஆவணப்படுத்தப்பட்டாலோ தான் வீட்டில் இருந்து குழந்தைகள் அப்புறப்படுத்துப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கையால் உணவு ஊட்டுவது, கட்டிப்பிடித்த்து முத்தமிடுவது, ஒரே படுக்கையறையில் குழந்தையோடு பெற்றோர் உறங்குவது போன்ற காரணங்களுக்காக குழந்தைகள் வீட்டிலிருந்து அகற்றப்படுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தூதரம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

வளர்ப்பு பெற்றோரிடம் அளிக்கப்படும் குழந்தைகள் தமது தாய்மொழியை கற்கவும் கலாச்சாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தேவையான சூழல் அளிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இலவச சட்டஉதவி வசதியும் உள்ளதாகவும் நோர்வே தெரிவித்துள்ளது.

Post Comment