கிளிநொச்சியில் பெண் நாடாளுமன்ற சங்கத்தின் சர்வதேச பெண்கள் தினம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உண்மையான ”மாற்றத்திற்கான கருவி பெண்கள்” எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்வொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சங்கமாம் ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், அவர்களின் கருத்துக்கள், மற்றும் புதிய வாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வட மாகாணத்தில் வாழ்கின்ற பெண்கள் குறிப்பாக யுத்தத்தின் பின்னர் தனித்துவமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதன் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட வடக்கிலுள்ள பெண்கள் இச் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுடன் கூட்டிணைந்து செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும் முகமாக மகளிர் தினச் செயற்பாடுகளை வடக்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சங்கமானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் இந்துமத அலுவல்கள் அமைச்சு. நகரதிட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சு, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு,அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு, மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து அவுஸ்ரேலிய அரசின் உதவியுடன் இந்த நிகழ்வை நடாத்தியிருக்கின்றனர்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான டிஎம். சுவாமிநாதன், சந்திராணி பண்டார,இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவுஸ்ரேலிய தூதரகத்தின் அதிகாரி மைக்கல் நியூமன், மற்றும் மேற்படி அமைச்சுகளின் செயலாளர்கள், பெருமளவான பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post Comment