நல்லாட்சியின் ஊடாக இழந்தவற்றை கட்டிக் காக்க வேண்டும்: அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

நல்லாட்சியின் ஊடாக நாங்கள் இழந்த அனைத்தையும் எதிர்காலத்தில் கட்டிக் காக்க வேண்டும் என மகளிர் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட இலங்கைச் சங்கீத சபையின் ஏற்பாட்டில் 21 ஆவது பட்டமளிப்பு விழா இன்று பிற்பகல் வட இலங்கைச் சங்கீத சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எங்கள் மொழியை, கலை- கலாசாரத்தை வளர்க்க வேண்டும். இதற்குப் பக்க பலமாக எங்களுடைய வட இலங்கை சங்கீத சபை காணப்படுகின்றது.

எங்களுடைய இளைஞர், யுவதிகளை கலை, கலாசார ரீதியாக வளர்த்தெடுப்பதற்கு வட- இலங்கை சங்கீத சபை ஒரு முக்கியமான மையமாகச் செயற்படுகிறது.

எதிர்காலத்தில் வட இலங்கை சங்கீத சபை மூலம் கூடுதலான மாணவர்களைப் பரீட்சைக்குத் தோற்க வைக்க வேண்டும்.
பாடசாலைகளில் நாங்கள் ஆங்கிலம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம். நடனம், சங்கீதம், சித்திரம், மனைப் பொருளியல் போன்ற பாடங்களை மாணவர்கள் தெரிவு செய்து கற்கும் போது அந்தப் பாடங்களில் அவர்கள் அதிக நாட்டம் கொள்ளச் செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவு செய்கின்ற பாடங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் வழங்குவது குறைவு. எம்மத்தியில் எத்தனையோ திறமையான மாணவர்கள் இருக்கின்றனர்.

ஆனால், நூற்றுக்குப் பத்துவீதமான மாணவர்களுக்குத் தான் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்படும் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுபவர்கள் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இன்று கலாவித்தகர் பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுடைய பிரதேசங்களை வளர்க்க வேண்டும்.

நாங்கள் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்து, சொத்துக்களை இழந்து வீதிகளில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல திறமையான மாணவர்கள் காணப்படுகிறார்கள். தாய், தந்தையர் இல்லாத நிலையில் அவர்களைப் பல பொது அமைப்புக்கள் பொறுப்பெடுத்துப் பராமரித்து வருகின்றனர்.

இவ்வாறானவர்களை இனங்கண்டு நாம் உதவி புரிய வேண்டும். எங்களுடைய கலை, கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு எமது பிரதேச மாணவர்களின் கல்வியை வளர்த்தெடுப்பது அவசியம்.

தற்போது இந்த நல்லாட்சிக் காலத்தில் கூட நாட்டிலே பல இந்து ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன என்றால் எங்களுடைய கலை, கலாசாரத்தை முற்றாக ஒழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
எங்களுடைய பிரதேசத்தில், மாவட்டத்தில், மாகாணத்தில் எங்கள் தாய் மொழியாகத் தமிழ்மொழி காணப்படுகின்ற நிலையில் அலுவலகங்களில் சிங்கள மொழிகளிலேயே பெயர்ப்பலகைகள் நாட்டப்படுகின்றன.

இது எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் ஒரு அநீதியான செயல். இந்த நிலை மாற வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால், நிறைய நன்மை செய்துள்ளது என்பதை அவர்கள் கூறமாட்டார்கள்.

எதிர்காலத்தில் இந்த நல்லாட்சியின் ஊடாக நாங்கள் இழந்த அனைத்தையும் கட்டிக் காக்க வேண்டும்.

பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் உரிய பிரச்சினையல்ல. இலங்கை முழுவதும் பட்டதாரிகளின் பிரச்சினை எதிர்நோக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் பிரதமரைச் சந்தித்துப் பேசிய போது வடக்கு- கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்துவோம் எனக் கூறியுள்ளார்.

நாங்கள் எவ்வாறான விடயங்கள் தொடர்பில் சென்று கதைத்தாலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வடக்கு- கிழக்கிற்கு முன்னுரிமை வழங்குவோம் என்று சொல்லுகிறார்கள்.

பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற போதும் வேகம் போதாமையாகவுள்ளது. ஆனால், வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றார்.

Post Comment