பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகள் இன்றும் இராணுவத்தின் வசம்-விஜயகலா

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சானிலுள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தை தூண்டும் வகையில் இராணுவத்தினர் இன்றும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று கிளிநொச்சி – இரணைதீவுப் பகுதியில் சொந்தத் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலும், மீள்குடியேற முடியாத நிலையிலும் அவர்களது காணிகளை கடற்படையினர் தங்களது ஆதிக்கத்தில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவடைந்தும் இராணுவத்தினர் பாடசாலைகள், ஆலயங்கள், தனியார் காணிகளில் இன்னும் குடியமர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் மீள்குடியேற்றங்கள் இடம்பெறாத நிலையில், நல்லாட்சி அரசாங்கமானது இராணுவத்திடமுள்ள தனியாருக்குரிய 6000 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அக்கறையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதா அக்கறை காட்டி வந்ததாகக் குறிப்பிட்ட விஜயகலா, ஈழத் தமிழர்களுக்கு இந்தியப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக ஓங்கியொழித்த தமிழக முதலமைச்சரின் இழப்பு கவலையளிக்கும் விடயம் என்றும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Post Comment