ஜெயலலிதா மரணம் தமிழர்களுக்கு பேரிழப்பு – விஜயகலா மகேஷ்வரன்

screen-shot-2016-12-06-at-22-29-36தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு செயற்பட்டு வந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு இந்த உயரிய சபையில் அஞ்சலி செலுத்துகின்றேன். இவரது மறைவினால் துயருற்றிருக்கும் தமிழக மக்களுக்கும் இலங்கைவாழ் தமிழ் மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மார்க்கிரட் தச்சர், இந்திராகாந்தி வரிசையில் செல்வி ஜெயலலிதாவும் இரும்புப் பெண்மணியாக தமிழகத்தை ஆட்சிசெய்திருந்தார்.

செல்வி ஜெயலலிதா தனது அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளையும் சோதனைகளையும் சந்தித்தபோது அவற்றை எதிர்கொண்டு மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

இதனால் தமிழக மக்கள் மத்தியில் அழியாத இடத்தினை அவர் தக்கவைத்துள்ளார்.

துணிச்சலுடன் தமிழக மக்களின் உரிமைக்காக பாடுபட்ட செல்வி ஜெயலலிதா இலங்கைவாழ் தமிழ் மக்கள் தொடர்பிலும் தீவிர அக்கறை செலுத்தி வந்தார். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது அதற்கு எதிராக குரல் எழுப்பிய ஜெயலலிதா, யுத்தத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அன்று தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே ஈழத் தமிழ் மக்களுக்காக அவர் குரல்கொடுத்திருந்தார்.

இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறிய செல்வி ஜெயலலிதா, இலங்கை தமிழர் விடயத்தில் தீவிர அக்கறை காண்பித்தார்.

அன்றைய இலங்கை அரசின் செயற்பாடுகளை ஜெயலலிதா கண்டித்தார். அன்றைய அரசுக்கு எதிராகவும், இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு சார்பாகவும் அவர் பல தடவைகள் சட்டமன்றத்தில் பிரேரணைகளை நிறைவேற்றினார்.

இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமைமீறல்கள், மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டசபையிலும் அதனை வலியுறுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தார். இலங்கை தமிழர் மீதான அடக்கு முறை தொடரும் வரை பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்திருந்தார்.

ஈழத்தமிழர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதில் அக்கறையாக இருந்த ஜெயலலிதா, இதற்கான அழுத்தங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கிவந்தார். இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அக்கறை காண்பித்து வந்தார்.

கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் கூட இலங்கை தமிழ் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கும் நிவாரண உதவிகளுக்கும் கூடுதலான நிதி ஒதுக்கியிருந்தார். இதனைவிட அங்கு அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக தமிழகத்திலிருந்து ஓங்கி ஒலித்த குரல் இன்று அடங்கி விட்டது. ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருந்த தமிழக முதல்வரது இழப்பானது பெரும் கவலை தரும் விடயமாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உயிரிழந்துள்ளமையை அடுத்து மலையகம் உட்பட இலங்கையிலுள்ள தமிழர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தவகையில் இலங்கைவாழ் தமிழ் மக்களின் சார்பில் செல்வி ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் தமிழக உறவுகளுக்கும் எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Post Comment