மகேஸ்வரி வேலயுதத்தின் அந்தரங்கப்பகுதிக்குள் சுட்டு கொன்றது ஈ.பி.டி.பியா?? நடந்தது என்ன?

maheshwari-velayudan-funeraஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினரின் பகீர் வாக்குமூலம்
ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து விலகிய சுப்பையா பொன்னையா என்பவர் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். சதா என்ற இயக்க பெயரால் அழைப்படும் இவர், 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஈ.பி.டி.பி அமைப்பில் அங்கம் வகித்ததாகவும், பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து விலகிச் சென்றதாகவும் கூறியுள்ளார். கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து பல உள்வீட்டு தகவல்களை தெரிந்து வைத்திருந்த இவர், தற்போது வெளியிட்டிருப்பதெல்லாம் ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி தருபவை.

கடந்த மாதம் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் சில பத்திரிகையாளர்களை சந்தித்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். பின்னர் தீபம் அலுவலகத்திற்கு வந்து இன்னும் அதிக உள்வீட்டு தகவல்களை பேசினார். யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய உருவாக்கப்பட்ட பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் பரவலாக விசாரணைகளை நடத்தியது. அப்பொழுது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுக்களில் ஒன்று- ஈ.பி.டி.பி எமது பிள்ளைகளை கடத்தியது, சுட்டுக் கொன்றது என்பது. அந்த குற்றச்சாட்டுகளிற்கு வலுச்சேர்க்கும் விதமான பல்வேறு தகவல்களை சதா வெளியிட்டுள்ளார்.

இதுவரை விடுதலைப்புலிகள் செய்ததாக கூறப்பட்டு வந்த பல்வேறு கொலைகளை ஈ.பி.டி.பியே செய்ததாகவும் கூறியுள்ளார். அது தவிர, ஈ.பி.டி.பிக்குள் நிலவிய அதிர வைக்கும் உட்கட்சி கொலைகள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவல்களின் சுருக்கம் இவை.

1990 இல் இராணுவத்துடன் இணைந்து தீவுப்பகுதிக்குள் நுழைந்தோம். ஊர்காவற்துறையில் எமது முகாம் இருந்தது. இப்பொழுது எமது மாத சம்பளம் 50 ரூபா. குடும்பகாரர்களிற்கு 650 ரூ 750 வரை கொடுக்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர்தான் தெரியவந்தது, அது இராணுவ சம்பளம்தான் அரசாங்கத்தால் எமக்கு வழங்கப்படுவது. முழுமையான இராணுவ சம்பளம் எமக்கு அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்பட்டாலும், வெறும் 50 ரூபாயைத்தான் ஆறேழு வருடங்களாக தந்தார்கள். இதுபற்றி கட்சியிடம் கேட்க முடியாது. இதை கேட்டு முரண்பட்டால் அடுத்தநாள் இருக்க முடியாது.

தீவுப்பகுதியிலிருந்து தப்பி விடுதலைப்புலிகளிடம் சரணடைய ஆறு உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் என்ற தகவல் கட்சிக்கு கிடைத்ததும், அவர்களை வெட்டிக் கொன்றார்கள். அதை செய்த, அதற்கு உத்தரவிட்டவர்கள் இப்பொழுது இங்குதான் உள்ளனர்.

ரெலோவில் இருந்து ஈ.பி.டி.பிக்கு வந்த சூரி என்பவர் கட்சித்தலைமையுடன் முரண்பட்டார் என்பதற்காக கொன்றார்கள். அவர் குடிபோதையில் இருக்கும்போது கொலை செய்து, சாக்கில் கட்டி வெள்ளவத்தை கடற்கரையில் போட்டார்கள். பொலிசார் சிலரை கைது செய்தபோதும், சிலநாட்களில் அனைவரும் வெளியில் வந்துவிட்டனர்.

கொழும்பு குண்டுவெடிப்பு ஒன்றுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தில் மலையக இளைஞன் ஒருவரை கைது செய்து கொண்டு வந்து அடித்து கொன்றார்கள்.

மகேஸ்வரி வேலாயுதம் கொல்லப்பட்டது, டக்ளஸ் தேவானந்தாவுடனான சொந்தகுடும்ப பிரச்சனையால். கொழும்பில் பிரச்சனைபட்டு கொண்டு மகேஸ்வரி பலாலியூடாக சொந்த இடமான நெல்லியடிக்கு வந்த அன்றே கொல்லப்பட்டார். அப்பொழுது நான்தான் யாழ் மாவட்டத்தில் வாகனப்பொறுப்பு, லீவு விடயங்கள், இராணுவ-பொலிஸ் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல்களை செய்து கொண்டிருந்தேன். மகேஸ்வரி யாழ்ப்பாணம் வந்துவிட்டாராமே என என்னை கேட்டனர். நான் தெரியாதென்றேன். பின்னர் கொல்லப்பட்ட பின்னர்தான் தெரியும். அவரை புலிகள் கொன்றார்கள் என சொல்லப்பட்டது. பின்னர் இராணுவம் கொன்றார்கள் என்றார். ஆனால் கொன்றது இவர்கள்தான்.

( 2008ம் ஆண்டு மே மாதம் தனது தாயாரின் சுகவீனத்திற்காக கொழும்பில் இருந்து வந்திருந்த மகேஸ்வரி வேலாயுதத்தை படையினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த கரவெட்டி மேற்குப் பகுதியில் உள்ள மகேஸ்வரின் வீட்டில் வைத்து இரவு 7.45 மணியளவில் மகேஸ்வரியை பெயர் சொல்லி அழைத்து இரு ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றார்கள். இவர்கள் மகேஸ்வரியைச் சுடும் போது முதலில் மார்பிலும் பின்னர் மகேஸ்வரின் அந்தரங்கப் பகுதியிலும் சுட்டுக் கொன்றார்கள். சுடும் போது ‘இதுதானா டக்ளசுக்கு இடம் கொடுத்தது‘ என்று கூறியே சுட்டுள்ளார்கள். மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு அண்மையில் வசிக்கும் புலி உறுப்பினரின் தந்தையும் சுட்டுக் கொல்லப்பட்டார். ) இந்தச் சம்பவங்கள் தொடர்பாக புலிகளின் புலனாய்வுப் பிரிவினர்கள் பலர் குழப்பத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வன்னியிலிருந்து புலிகளால் வழிநடாத்தப்பட்ட பல புலிப் புலனாய்வாளர்கள் மகேஸ்வரி கொலையை இன்னொரு புலிப் புலனாய்வுப் பிரிவு நடாத்தியது என்றே நினைத்திருந்ததாகவும் இதனால் தமது கட்டளைப் பீடத்துடன் முரண்பட்டதாகவும் பல ஊடகவியலாளர்களுக்கு புலிகளின் புலனாய்வாளர்கள் அந் நேரத்தில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. )

மண்டையன் குழு தலைவன் மாதிரி வெள்ளைவான் குழு தலைவன் எம்முடன்தான் இருந்தார். யாராவது ஒருவரை கொல்ல வேண்டுமென விரும்பினால் உடனே போய் கொல்லுவார்கள். பேரூந்து நிலையத்திற்குள் மிக்சர் கடைக்குள் வைத்து இருவரை கொன்றார்கள்.

எமது கட்சியின் நீண்டகால உறுப்பினராக கோபு என்பவர் இருந்தார். அவரது மனைவி, மனைவியின் சகோதரர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என கூறி கொன்றார்கள். ஈ.பி.டி.பி உறுப்பினர்களான பாண்டியன், கிளி (பல கொலைகளை இவரை பயன்படுத்தியே செய்தார்கள்) என்பவர்களையும் கொன்றார்கள். ஊர்காவற்துறையில் கிளிக்கு மதுபோதையேற்றி கிணற்றிற்குள் தள்ளிவிழுத்தி கொன்றார்கள்.

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ரமேஸ் (அற்புதன்) தலைமையின் செயற்பாடு சரியில்லையென விமர்சித்து, விலகிப்போக முயன்றபோது, விடுதலைப்புலிகள் கொன்றதாக நாடகமாடி கொன்றார்கள். அந்தகொலையை ஏன் செய்தீர்கள் என பத்மன், சந்திரகுமார் (முன்னாள் கிளிநொச்சி எம்.பி) ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டு, கட்சியை விட்டு வெளிநாட்டிற்கு சென்றார்கள். அதுபோல, இதயவீணை வானொலிக்காக இந்தியாவிலிருந்து கே.எஸ்.ராஜாவை மதுவிற்குள் சயனைட் கலந்து ஈ.பி.டி.பிதான் கொன்றது.

ஊடகவியலாளர் நிமலராஜனை ஈ.பி.டி.பிதான் கொன்றது. நெப்போலின், விஸ்வன், முரளி, பாட்ஷாதான் (இருவரும் இப்பொழுது இல்லை) இதில் சம்பந்தப்பட்டவர்கள். இதில் பிரதானமானவர் நெப்போலியன். இப்பொழுது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் நெடுந்தீவிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு சென்று, அங்கிருந்துதான் வெளிநாட்டிற்கு சென்றார்.

நாரந்தனைக்கு பிரசார பணிக்காக சென்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியது மதனராஜா என்ற ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்தான்.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் சந்தேகத்திற்கிடமானவர்களை அடையாளம் காண இராணுவம் உதவிக்கு வந்தது ஈ.பி.டி.பியிடம். ஈ.பி.டி.பியின் வெள்ளைவான் குழு தலைவராக இருந்தது சாள்ஸ். அவர் ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஆட்கள் வைத்திருந்து, தகவல் திரட்டுவார். அவர் உத்தரவிட்டால் அன்று ஒருவர் இல்லாமல் போவார்.

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பெருமளவு பணமோசடியில் கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டனர். கட்சி உறுப்பினர்களின் பணத்தைகூட எதிர்கட்சி தலைவர் தவராசா மோசடி செய்தார். படகு,வலை பெற்றுத்தருவதாக எங்கள் 25 பேரை நீர்கொழும்பிற்கு அழைத்துசென்றார். எம்மை கையெழுத்து வைக்கவைத்து, அந்தபணத்தை எடுத்துக்கொண்டார். ஒவ்வொருவரின் பெயரிலும் 3 இலட்சத்துக்கும் அதிக பணம். இது நடந்தது 1993/94 இல்.

1990களில் தீவுப்பகுதி ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கூட்டுறவு சங்கத்தில் அதிக ஆட்தொகை காட்டி பொருட்கள் எடுப்பார்கள். ஊர்காவற்துறையில் பத்தாயிரம் குடும்பம் கணக்கு காட்டுவார்கள். ஆனால் இருந்தது 700 பேர். நெடுந்தீவில் பதினையாயிரம் குடும்பம், நயினாதீவில் பத்தாயிரம் குடும்பமென கணக்கு காட்டுவார்கள். அங்கிருந்ததெல்லாம் குறைந்தளவானவர்களே. எஞ்சிய பொருட்களை ஈ.பி.டி.பி விற்கும். எனக்கும் ஒருவிற்பனை பகுதி தரப்பட்டிருந்தது. இந்த வியாபாரங்களிற்கு பொறுப்பாக இருந்தவர் ராமேஸ்வரன். இப்பொழுது இந்தியாவில் இருக்கிறார். இவரது தம்பி ராமமூர்த்தி. இவர்கள் ஈ.பி.டி.பிக்கு வரும்போது சொப்பிங்பையில் உடுப்பு கொண்டு வந்தவர்கள். இவர்களுடன் குணசீலன் என்பவர் இருந்தார். அவரது குடும்பமே இப்பொழுது லண்டனில். தீவுப்பகுதியில் உழைத்த, மக்களிடம் இருந்து எடுத்த, ஆடு மாடு விற்ற காசுகள்தான் இது.

1993இல் நெடுந்தீவுக்கு அண்மையில் தொழிலுக்கு வந்த இந்திய மீனவர்களை, வேகப்படகில் போன ஈ.பி.டி.பியினர் சத்தவெடி வைத்து மறித்துள்ளனர். அவர்கள் தப்பியோட, ஈ.பி.டி.பியினர் சுட்டனர். அதில் மூவர் கொல்லப்பட்டு விட்டனர். ஈ.பி.டி.பி போய் மீனவர்களை மறிப்பது மீன், பற்றரி, படகு பறிமுதல் செய்ய. அப்படி பறித்த இந்தியமீனவர் படகொன்று மடுமாதா என்ற பெயரில் இப்பொழுதும் நெடுந்தீவுக்கும் ஊர்காவற்துறைக்குமிடையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அரியாலைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் படகு ஓட்டியாக இருந்த ஒருவர் வசிப்பதாக எமது கட்சிக்காரர் ஒருவர் தகவல் கொண்டு வந்தார். அவரது நடமாட்டத்தை அவதானித்து அவரை ஒருநாள் இரவு கடத்தினார்கள். அந்த சம்பவத்திற்கு என்னையும் அழைத்து சென்றனர். அவரை கொண்டுவந்து இராணுவத்திடம் கொடுத்தார்கள். அவரை தேடி மறுநாள் பெற்றோரும் வந்தார்கள். அன்றோ, மறுநாளோ அவரை விசாரிக்க இராணுவம் அடித்ததில் அவர் இறந்துவிட்டார். ஒரு பதுங்கு குழிக்குள் சடலத்தை போட்டு மூடிவிட்டார்கள்.

சின்னத்துரை தவராசா

இவர் கூறியிருப்பது புதிய குற்றச்சாட்டுக்கள் கிடையாது. நீண்டகாலமாக பத்திரிகைகள் வழியாக சிலர் கூறிக்கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள்தான். இப்படி குற்றம்சாட்டும் யாரும் ஆதாரங்களை முன்வைப்பதில்லை. எங்கள் மீது குற்றம் இருந்தால் கடந்த அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்குமே. எங்கள் மீது அவதூறு பரப்ப வேண்டுமென்பதற்காக சிலர் தீட்டிய சதித்திட்டமே இது. இந்த நபர் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தரே கிடையாது. சாதாரண உறுப்பினராக நீண்டகாலத்தின் இருந்திருக்கலாம். இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு, இப்பொழுது ஏன் பேசுகிறார்? ஈ.பி.டி.பி குற்றமிழைத்தது என்றால் அவர் காவல்த்துறையிடமல்லவா அதை கூற வேண்டும், இப்படி ஊடகங்களின் முன் பேசிக்கொண்டிருந்தால், இதுவரையான அவதூறுகளில் ஒன்றாகத்தானே இதுவும் முடியும். கட்சியின் சில உறுப்பினர்கள் தவறிழைத்திருந்தால் அதை விசாரிக்க தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் எதுவும் வரவில்லை.

Post Comment