யாழ் நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் 1987ஆம் ஆண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகிகள் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (26) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியின் முன்பாக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை 10 மணிக்குத் திலீபன் உண்ணா விரதமிருந்து உயிர் நீத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் மேற்குப் புறமாகக் கூடிய முன்னாள் போராளிகளும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.

திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் நினைவு தீபம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளர் க. அருந்தவபாலன், வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ். சுகிர்தன், எஸ்.சிவநேசன், அ.பரஞ்சோதி, தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைவர் சு.நிஷாந்தன், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் உணர்வு பூர்வ மலரஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பலர் திலீபனின் தியாகங்களையும், தமிழ்மக்களுக்காக அவர் செய்த அர்ப்பணிப்புக்களையும் நினைவு கூர்ந்து உரையாற்றினர்.

குறித்த நிகழ்விற்குத் வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மூத்த அரசியல் வாதி வீ. ஆனந்தசங்கரி ஆகியோரும் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை, திலீபனின் நினைவாகக் கலந்து கொண்டிருந்த தாயாரொருவர் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி அனைவரையும் உருக வைத்தது.

அத்துடன் இன்று காலை முதல் திலீபனின் நினைவிடத்தில் வீதியால் செல்பவர்கள் பலரும் அவ்விடத்தில் இறங்கி நின்று வீரவணக்கம் செலுத்திவிட்டுச் செல்கின்றமையை அவதானிக்க முடிந்தது.

Post Comment