நோர்வே பெண் துஷ்பிரயோகம்: கிரிக்கெட் வீரர் தனுஷ்க வாக்குமூலம்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவின் நண்பர் ஒருவர் நோர்வே நாட்டு பெண் ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தனுஷ்கவிடம் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

நோர்வே நாட்டைச் சேர்ந்த 23 வயது பெண், தான் கொள்ளுபிட்டியவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், பிரித்தானிய குடியுரிமை பெற்றவரும், தனுஷ்கவின் நண்பருமான சந்தீப் ஜூட் செல்லையா கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காட்டப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தீப்பிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து நோர்வே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துடன் தனுஷ்க குணதிலகவும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 21ஆம் திகதி, நோர்வே நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் தனுஷ்கவினால், கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் தனுஷ்கவுடன் சமூக வலைத்தளம் மூலமாக நட்பினைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் தனுஷ்கவின் நண்பரும் ஹோட்டலுக்கு வந்துள்ளதோடு, நால்வரும் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ்க உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பரால் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post Comment