யாழிற்கான முதல் விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது – நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயம் மகிழ்ச்சி அளிப்பதாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் முதல் தடவையாக விஜயம் மேற்கொண்டிருந்த இவர் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அதன் பின்னர் குறித்த விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், முழு இலங்கையினதும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தற்போது வட மாகாணத்தின் நிலைமை என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு கடல்வள பாதுகாப்பு தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டது.

கடல்வளம் என்பது இன்றியமையாததாகும். அதன்மூலமாக எரிபொருள் பெறப்படுகின்றது. அது மட்டுமன்றி சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

எனவே கடல்வளத்தை பாதுகாத்தல், அதனை தூய்மையாகப் பேணுதல் என்பன தொடர்பில் நோர்வே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

கடல்வளத்தை பாதுகாப்பதற்கான நோர்வேயின் சர்வதேச அளவிலான பங்களிப்பாக 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை நோர்வே அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதன்மூலம் கடல் மற்றும் சுற்றாடல் மாசுபாடு என்பவற்றைக் குறைக்க முடியும்.

மேலும் இங்கு புதிதாக பழங்களைப் பொதி செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளேன். இதன்மூலம் 200 குடும்பங்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் என்பதுடன், இது இலங்கையின் பொருளாதார வலுப்படுத்தலுக்கும் பங்களிப்புச் செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

Post Comment