முகநூலில்.. மலிவான அரசியலும் தேசியமும் பேசுபவர்கள்.. சீ..தூ..

நோர்வேயில், குறிப்பாக ஒஸ்லோவில் இருந்து, முகநூலிலும் இணையத்தளத்திலும் முன்னாள் போராளிகளின் அவல வாழ்க்கை பற்றியும், போரின் பின்னதாக எமது மக்களின் வாழ்வுநிலை பற்றியும் “நடுநிலையாளர்களாக” கண்ணீர் வடிப்பவர்கள் வரிசைகட்டி வாருங்கள்.. உங்கள் முகத்தில் சீ.. தூ.. என அவர்களே உமிழ்ந்து கொள்ளட்டும்.

பிரமாண்டமான அரங்கிலே எமக்கான எந்த கரிசனையும் இன்றி தனது வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டுவரும் தென்னிந்தியக் கலைஞர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து Kr.750 – Kr. 250 வரை நுழைவுச்சீட்டுக்கு பணம் கொடுத்து,
தேவைப்படும்போது 3 நாள் குரல் பயிற்ச்சிக்காக Kr. 3000 வரை செலவுசெய்து, அவர்களை ஆகோ ஓகோவெனப்புகழ்ந்து முகநூலில் பெருமைபட்டுக்கொள்ளும் கவான்களே உங்களது சுயநலமான மற்றும் மலிவான அரசியலை பார்க்கும்போது கண்கள் வேர்க்குது.

நேற்றைய தினம், அடுத்த தமிழ் தலைமுறைகள் மற்றும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்புகள் இணைந்து நம்பிக்கைத்துளிர்கள் என்ற நிகழ்வினை ஒஸ்லோவில் நடாத்தியிருந்தார்கள். முல்லை கோதண்டம் அவர்களைத்தவிர முற்றுமுழுதாக எமது தாயகக்கலைஞர்களது பங்களிப்போடு நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சி.

அதிலும் முக்கியமானது நிமால் எனும் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவரும் தாயகத்தில் இருந்து வந்து இசைப்பாடல்களை வழங்கியிருந்தார்.
ஒரு போராளி என்பதோடு இசைக்கலைஞனான இவர், போராட்டகாலத்தில் பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இறுதி யுத்தத்தின்போது தனது இரு கால்களையும் இழந்து மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் தன்னால் முடிந்த உதவிகளை தன்போன்று போரினால் பாதிப்படைந்தவர்களுக்கு இவர் செய்துவருகிறார் என்பதை அறிந்தபோது இவரை மாற்றத்துக்கான திறனாளி என்றே நினைக்கத்தோன்றியது.

இப்படி, நல்ல நோக்கத்திற்காக நலிவடைந்த எமது மக்களுக்காக ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் தம்மாலான உதவிகளை செய்து வருகிறார்கள். புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களுக்கு ஒரு உத்வேகம் வேண்டியே இப்படியான கலைஞர்களையும் தாயகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு கலை நிகழ்ச்சிகளை நடாத்துகிறார்கள். ஆக, முகநூலிலும் சரி இணையத்திலும் சரி தொடர்ச்சியாக புலிகளை விமர்சனம் செய்பவர்கள், போராட்டத்தின் பின் பாதிப்படைந்த போராளிகள், மக்கள் மீது நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் எல்லாரும் நேற்று எங்கே போயிருந்தீர்கள்?

இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம் நிறைத்திருக்க வேண்டாமா? இந்த நிகழ்வுகளுக்கு நீங்கள் ஆதரவாக கொடுத்திருக்க வேண்டியது kr.100/kr.150 மட்டுமே. இது ஓர் இசைநிகழ்ச்சி என்பதுக்கு அப்பால் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கருத்து பேதமின்றி ஆதரவுக்கரம் கொடுக்கவேண்டிய ஒரு நிகழ்வு, எமது கடமை. ஆனால், இங்கேயும் உங்களது மலிந்த கீழ்த்தரமான அரசியலை நிலைநிறுத்தி எங்கே ஓடி ஒளிந்துகொண்டீர்கள்?

அறிவாளிகளாய், தொலைநோக்கு சிந்தனையாளர்களாய், எழுத்தாளர்களாய், பன்முக திறமையாளர்களாய்…புலம்பெயர் சமூகத்தில் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முயலும் ஆலையில்லா ஊரின் இலுப்பைப் பூக்களே.. வரிசைகட்டி வாருங்கள்.. உங்களது முகங்களில்
சீ.. தூ.. என அவர்களே உமிழ்ந்து கொள்ளட்டும்.

Post Comment